July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கில் வி.சி.க. நிர்வாகி பாஸ்போர்ட் முடக்கம்

1 min read

Passport of V.C.K. executive frozen in counterfeit note printing case

2/5/2025
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.

இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று முன்தினம் அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.

அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி,2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறுப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ஆவட்டி கூட்டு ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் அரவிந்த் (30), அஜித் (24) மா.புடையூர் வடிவேல் (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் சக்திவேல் (26) என்பது தெரிய வந்தது.

இவர்கள் செல்வத்தின் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தோட்டத்து வயலில் விஸ்தாரமான அறையின் ஒரு பகுதியை தடுத்து மற்றொரு அறையை உருவாக்கி அதில் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வந்துள்ளது.

மாதத்திற்கு 2 நாட்கள் இரவில் மட்டும் அச்சடித்து விட்டு மற்ற நாட்களில் அறையை பூட்டி வைத்துள்ளனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வருகிறது.

கள்ள நோட்டு அச்சடித்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வத்தின் நண்பர் ஆவட்டியை சேர்ந்த பிரபு கடந்த 2022-ல் தனது முகநூலில் ஆவட்டி டான் பிரபு என்ற பெயரில் ஆர்.பி.ஐ. ஆபீசர் போன்று போலி சான்றிதழை பதிவிட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கி, வாக்கி டாக்கியுடன் போட்டோ வெளியிட்டுள்ளார். செல்வம், பிரபு ஆகியோர் கடந்த 3 மாத்துக்கு முன் மும்பை தாஜ் ஓட்டலில் அரபு நாட்டை சேர்ந்த சிலரை சந்தித்துள்ளனர். மேலும் முக்கிய புள்ளிகளையும், அவர்களது நெருங்கிய உறவினர்களையும் சந்தித்துள்ளனர்.

ஸ்டார் ஓட்டலில் தங்குவது, சாப்பிடுவது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செல்வம் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டு அச்சடித்த செல்வத்தின் கொட்டகை வீடு பூட்டுபோடப்பட்டு போலீசார் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

செல்வம் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.