உலக பணக்காரர்கள் பட்டியலில் 18 வது இடத்திற்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி
1 min read
Mukesh Ambani dropped to 18th place in the list of world’s richest people
3.4.2025
பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை 39 வது உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் 3,000க்கும் அதிகமானோர் இடம் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம் பிடித்துள்ளனர்.
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க். அவருடைய சொத்து மதிப்பு 342 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த ஓராண்டு காலத்தில் இவரின் சொத்து மதிப்பில் 147 பில்லியன் டாலர்கள் சேர்ந்திருப்பதாக போர்ப்ஸ் கூறுகிறது. அமெரிக்க அரசின் செயல் திறன் துறையின் தலைவராகவும் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பர்க் 216 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் முறையாக இவர் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 215 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், ஒராக்கில் நிறுவனத்தின் லாரி எலிசன் 192 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். 178 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு அர்னார்டு பெர்னால்ட் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக பில்லியனியர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் 902 பில்லினியர்களும், சீனாவில் 516 பில்லினியர்களும் இருக்கின்றனர். இந்தியாவில் 205 பில்லியனியர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு முதன்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். டாப் 10 பட்டியலில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 18ம் இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு 116 பில்லியன் டாலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 92.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அடுத்ததாக கவுதம் அதானி 28 வது இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 56.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.