தென்காசி கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள்
1 min read
Security arrangements for the consecration of the Tenkasi temple
5/4/2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்ளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் வருகின்ற (07.04.2025) அன்று காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மகா கும்பாபிஷேக நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களான இராஜகோபுரம், சுவாமி சன்னதி. அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிடுவதற்கு ஏதுவாகவும், பாதுகாப்பு கருதியும், கம்புகளை அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்து திருக்கோயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதிகள் தேவையான இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் சுற்றியுள்ள ரதவீதிகளிலும், திருக்கோயில் வளாகத்திற்குள்ளும் நின்று திருக்குடமுழுக்கை காணும் பக்தர்களுக்கு டிரோன் ειρονώ தீர்த்தம் தெளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. LED திரை மூலம் குடமுழுக்கினை பக்தர்கள் கண்டு களிப்பதற்கு ஏதுவாக இத்திருக்கோயில் மற்றும் ரதவீதியில் டிரோன் கேமராக்கள் கொண்டு படப்படிப்புசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தன்று பக்தர்கள் நலன் கருதி அவசர கால உபகரணங்களுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறும், அவசர ஊர்தி தயார் நிலையில் இருக்குமாறும் சுகாதாரத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் நலன் கருதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான சிறப்பு உபகரணங்களுடன் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், திருக்கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய நகர் பகுதிகளுக்குள் சேதமடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் இருப்பின் அதனை சரிசெய்து தர மின்சார துறையுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயில் அமைந்துள்ள பகுதி, ரதவீதி, பேருந்து நிறுத்தம், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளை சுத்தம் செய்து தூய்மையாகப் பராமரித்திடவும். கிருமி நாசினி தெளித்து தொடர்ந்து சுத்தமாக பராமரித்திடவும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவும், நகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து வழங்கவும், நான்கு ரதவீதிகளிலும் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக காவல் துறையினரால் தெரிவிக்கப்படும் இடங்களில் தடுப்பு அமைப்பு வழங்கவும், பிற பகுதிகளில் இருந்து வருகைபுரியும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறையுடன் இணைந்து போதுமான இட வசதியுடைய வாகன நிறுத்தம் இடத்தை தேர்வு செய்து சுத்தப்படுத்தி வாகனங்களை நிறுத்த போதுமான முன்னேற்பாடுகள் செய்து தர நகராட்சியுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்கும், எந்த ஒரு இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கும். இந்து சமய அறநிலையத்துறை, தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் 19 திருக்கோயில்களில் இருந்து சிறப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும், மேற்படி கேமிராக்களின் காணொளிப் பதிவை திருக்கோவிலின் முன்புறம் அமையவுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கும் வகையில் உரிய வசதிகள் செய்து தரவும், பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும், கோவில் வளாகங்களை கண்காணிக்கும் பொருட்டு போதிய எண்ணிக்கையிலான காவலர்களை பணியிலமர்த்தவும், தென்காசி நகரின் முக்கிய சாலைப் பகுதியில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும். வாகன சோதனைச்சாவடிகளில் போதிய எண்ணிக்கையிலான காவலர்களை நியமனம் செய்து, சோதனை செய்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கவும், கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு உரிய அறிவிப்பு செய்து, பாதுகாப்பு வழங்கி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வரும் நிலையில், பக்தர்கள் வரிசையில் நின்று இடையூறின்றி தரிசனம் செய்வதை கண்காணிக்கவும் காவல் துறையுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு உள்ளே கட்டுக்காட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சாலையில் இருந்து தென்காசி வரும் பக்தர்கள் ஆசாத் நகர் பகுதியிலும், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்து பயணிகள் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு பரதன் தியேட்டர் வளாகத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் சாலை வழியாக தென்காசி வரும் பக்தர்கள் தங்களின் வாகனத்தை பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகனம் நிறுத்தத்திலும், குற்றாலத்தில் இருந்து தென்காசி வரும் பக்தர்கள் தங்களின் வாகனத்தை மதுரம் ஹோட்டல் அருகே அமைக்கப் பட்டுள்ள வாகனம் நிறுத்தத்திலும்,
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை நடு பல்க் அருகே அமைந்துள்ள தென்காசி கால்நடை மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள வாகனம் நிறுத்தத்திலும். தென்காசி புதிய பேருந்து நிலையம் வழியாக வாகனத்தில் வரும் பக்தர்கள் தங்களின் வாகனத்தை பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் சாலை வழியாக கேரளா மாநிலம் செல்ல ஆசாத் நகர் மத்தளம்பாறை பழைய குற்றாலம் குற்றாலம் செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்திற்கும், செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய கனரக வாகனங்கள் பண்பொழி- கணக்கப்பிள்ளை வலசை இலத்தூர் ஆய்க்குடி சுரண்டை -அத்தியூத்து வழியாக திருநெல்வேலிக்கும்.
செங்கோட்டையிலிருந்து அம்பாசமுத்திரம் மார்க்கமாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் பிரானூர் பார்டர் குற்றாலம் – பழைய குற்றாலம் – மத்தளம்பாறை வழியாக அம்பாசமுத்திரத்திற்கும், மதுரையில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் இலத்தூர் விலக்கு ஆய்க்குடி சுரண்டை அத்தியூத்து வழியாக திருநெல்வேலிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருநெல்வேலி, பாபநாசம் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து கும்பாபிஷேகத்தினை காண வரும் பக்தர்களுக்கு போக்குவரத்துத் துறை மூலம் 31 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் நடக்க இருப்பதால் பக்தர்கள் காலை குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பே கோவிலுக்கு வருவதன் மூலம் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். பக்தர்களுக்கு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் தெப்பக்குளம் பகுதியில் மட்டுமே அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர்த்து ரத வீதிகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தனி நபர் அல்லது அமைப்புகள் மூலமாக அன்னதானம் எதுவும் கொடுக்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர பிற இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
அவ்வாறு நிறுத்தினால் காவல்துறையினரால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். சாலையில் யாரேனும் தவறவிட்ட பொருளை தன்வசம் வைத்துக்கொள்ள கூடாது. காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் மற்றும் தங்களின் குழந்தைகள் அணிந்திருக்கும் தங்க நகைகள் மற்றும் உடமைகள் மீது கவனக்குறைவுடன் இருக்கக் கூடாது. முறையான அனுமதி பெறாமல் தனிநபரோ அல்லது செய்தி நிறுவனங்களால் ட்ரோன் கேமராக்கள் பறக்க விடக்கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கும்பாபிஷேக விழாவை காண வரும் பக்தர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள். காவல்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.