வக்பு பிரச்சினையில் நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகல்
1 min read
Senior leaders quit Nitish Kumar’s party over Waqf issue
5.4.2025
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, மாநிலங்களவையில் வியாழன் அன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், “வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்” என்று கூறியுள்ளார்.
இது பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.