கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து 7 பெண்கள் பலி
1 min read
7 women killed as tractor falls into well
6.4.2025
மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டம் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த 9 பெண்கள் உள்பட 10 பேர் காலையில் விவசாய வேலைக்காக டிராக்டரில் நந்தீம் மாவட்டத்திற்கு சென்றனர்.
நந்தீம் மாவட்டம் அல்ஹொன் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விவசாய வேலைக்காக சென்றனர். டிராக்டரை தோட்டத்திற்குள் டிரைவர் ஓட்டிச்சென்றுள்ளார்.
தோட்டத்தில் உள்ள கிணறு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
அப்போது, தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த சிலர் விரைந்து வந்து கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டரில் இருந்து 2 பெண்கள் உள்பட 3 பேரை உயிருடன் மீட்டனர். டிராக்டர் டிரைவர் விபத்து ஏற்படுவதற்குள் கீழே குதித்து உயிர்பிழைத்துவிட்டார்
ஆனால், இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் விரைந்து வந்த உயிரிழந்த 7 பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.