கடையம் திருவள்ளுவர் கழக கூட்டத்தில் உடல் தானம் செய்தவருக்கு பாராட்டு
1 min read
Appreciation for the person who donated his body at the Kadayam Thiruvalluvar Kazhagam meeting
6.4.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. வடக்கு ரத வீதியில் உள்ள கே.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளுவர் கழக தலைவர் தமிழ்த் தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியை திருவள்ளுவர் கழக செயலாளர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் தொகுத்து வழங்கினார்.
பி.எஸ்.என்.எல். பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற க.வெ.பாலசுப்பிரமணியன் “வள்ளுவமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கடையம் ஷிபா கார்டனைச் சேர்ந்த ராஜாராமன் அவர்கள் உடல் தானம் செய்ய பதிவு செய்து வைத்துள்ளார். அவரை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அவருடைய தந்தை க.சங்கரநாராயணன் (ப.நி. மாவட்ட கல்வி அதிகாரி) கண் தானம் செய்தவர். தாயார் கோமதி சங்கரநாராயணன். அவர்களும் இந்த நிகழ்ச்சியல் பங்கேற்றனர்.
ராஜாராமன் பேசும்போது, உடல்உறுப்புகள் தானம் செய்ய மனத்துணிவு வேண்டும் என்றும் இதனால் நாம் இறந்த பிறகும் நம் உடல் உறுப்புகள் வாழும் என்றார்.
சே.அறிவுடைநம்பி குறள் சிந்தனை சொன்னார். முன்னதாக நல்நூலகர் மா.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். அ.அந்தோணிராஜ் நன்றி கூறினார். க.மதுபாலன் இறைவணக்கம் பாடினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சுக்கு தேநீர் வழங்கப்பட்டது.