பெண்ணின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதை
1 min read
Sapota seed stuck in woman’s lungs and respiratory tract
6.4.2025
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி வீரஜக்கம்மாள் 50. விவசாய தொழிலாளி. இவருக்கு மூச்சு திணறல், இருமல் அதிகமாக இருந்ததால் கடந்த மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். மூச்சு திணறலால் 2 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வருவதாக டாக்டரிடம் தெரிவித்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சி.டி.,ஸ்கேன் மூலம் நுரையீரல் குழாயில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பது தெரிந்தது. இதனை அகற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.
மயக்கவியல் டாக்டர்கள் உதவியுடன், நுரையீரல் அகநோக்கி கருவி (ப்ரோன்கோ ஸ்கோப்பி) மூலம் நுரையீரல் குழாயில் சிக்கியிருந்த கருப்பு நிறப் பொருளை எடுத்தனர். அது சப்போட்டா பழத்தின் விதை என பின்னர் தெரிந்தது. சப்போட்டா பழ விதையை அகற்றிய நுரையீரல் சிறப்பு டாக்டர் இலக்கியசெல்வன், மயக்கவியல் துறைத்தலைவர் கண்ணன் போஜராஜ் உள்ளிட்ட குழுவினரை மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா, கண்காணிப்பாளர் விஜய்ஆனந்த் பாராட்டினர்.
டாக்டர் இலக்கியசெல்வன் கூறுகையில், ‘குழந்தைகள் சாப்பிடும் போது, உணவு நுரையீரல் குழாய் பகுதிக்கு செல்வது இயல்பு. ஆனால், பெரியவர்கள் சாப்பிட்ட உணவு இவ்வாறு சிக்கி கொள்ளவது அரிதானது. மூச்சுத்திணறல், தொடர் இருமல் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்,’ என்றார்.