July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்திற்கு அதிக நிதி கொடுத்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி பேச்சு

1 min read

Some people are crying despite giving more funds to Tamil Nadu: Prime Minister Modi

6.4.2025
“மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும். அழுது கொண்டே இருப்பவர்களால் அழுது கொண்டு மட்டும்தான் இருக்க முடியும்,” என பிரதமர் மோடி பேசினார்.

தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-
என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். சற்றுநேரம் முன்பு தான் அயோத்தி ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன. தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஒட்டுமொத்த தேச மக்களுக்கும் ராம நவமி தின நல்வாழ்த்துகள். இன்று ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இன்று ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ஒப்படைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
ராமேஸ்வரம் பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமியாகும். பாம்பன் பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்து பாலம்.
ஆன்மிகமும், அறிவியலும், ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல்கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பம், பாரம்பரியத்தை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளே காரணம்.
புதிய ரயில் திட்டங்களால் ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிணைந்தால் நாடு வளர்ச்சி, வலிமை பெறும். சுற்றுலா, வணிகத்திற்கு பதிய பாம்பன் பாலம் வழிவகை செய்யும். நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த திறனும் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு 7 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும். அழுது கொண்டே இருப்பவர்களால் அழுது கொண்டு மட்டும்தான் இருக்க முடியும்.
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் ரயில்வே துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க, ஆட்சியில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கூட மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. ஏழை மக்களுக்கு 12 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்ட மூலம் ஒரு கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். மருந்துகள் வாங்க வேண்டுமென்றால் மக்கள் மருந்தகத்தில் வாங்குங்கள். மக்கள் மருந்தகங்களில் 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் 1400 க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் மருந்தகம் மூலம் ரூ. 700 கோடி மக்கள் சேமித்துள்ளனர்.
மருத்துவ படிப்பிற்கு இளைஞர்கள் அயல் நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது. மருத்துவ படிப்பை தமிழில் வழங்க வேண்டும். ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ படிப்பை தமிழில் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். அது தான் எங்கள் விருப்பம்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்வளத்துறை கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உதவி செய்கிறது. தமிழகத்தின் மீனவர்கள் மிகவும் கடினமாக உழைப்பவர்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். மீனவர்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும் மத்திய அரசு துணை நிற்கிறது. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்டது.
தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளது. தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள். தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா? 21ம் நூற்றாண்டில், தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இதே பாம்பன் பாலத்தை கட்டியவர் ஒரு குஜராத்தி தான். புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்ததும் ஒரு குஜராத்தி ஆகிய நான் தான். இன்று பா.ஜ.க,வின் நிறுவன நாளும் கூட. இன்று நாட்டு மக்கள் பா.ஜ.க,வின் நல்லாட்சியை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் பா.ஜ.க, தொண்டர்களின் கடின உழைப்பும் அடங்கியுள்ளது. மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் தமிழகத்தின் இந்த அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கான நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நன்றி, வணக்கம். மீண்டும் சந்திப்போம் என பிரதமர் மோடி தமிழில் கூறி உரையை முடித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.