அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு
1 min read
Minister Ponmudi’s controversial speech again
11.4.2025
தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை அமைச்சர் பொன்முடி, ‘ஓசி பயணம்’ என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும் சர்ச்சையானது.
மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, எனக்கோ ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று கூறினார்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்ட பொதுமக்களிடம், நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று கேட்டார்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார்.
இதனை தொடர்ந்து, அவரது உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியில் உள்ளார்.