July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

ரெய்டுக்கு பயந்தே பாஜக வுடன் அ.தி.மு.க. கூட்டணி- மு.க.ஸ்டாலின் விமர்சனம்

1 min read

AIADMK alliance with BJP due to fear of raids – MK Stalin’s criticism

12.4.2025
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை மந்திரி அமித்ஷா.
நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
நீட் தேர்வை – இந்தித் திணிப்பை – மும்மொழிக் கொள்கையை – வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அ.தி.மு.க. இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை மந்திரி பேசவில்லை. அ.தி.மு.க. தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக தி.மு.க.வையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை மந்திரி என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.
மாநில உரிமை – மொழியுரிமை – தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை – தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.

நீட் தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பிய போது அதற்கு சரியான பதிலை உள்துறை மந்திரியால் சொல்ல முடியவில்லை. ‘நீட் தேர்வு சரியானது’ என்றாவது தனது வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, ‘நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது’ என்ற திசை திருப்பும் பதிலையே உள்துறை மந்திரி சொல்லி இருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கிறார்கள். இவர்களும் திசை திருப்பும் வகையில்தான் தற்கொலை செய்து கொண்டார்களா? இங்கு மட்டுமல்ல, பீகாரிலும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இதற்கு உள்துறை மந்திரி என்ன சொல்கிறார்?

ஐந்து மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவதும், மாணவர்கள் சிலரும் பெற்றோர் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாவது உள்துறை மந்திரிக்குத் தெரியுமா? சி.பி.ஐ. யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? விசாரிக்கவும். அதன் பிறகு ‘நீட் தேர்வு எதிர்ப்பு’ என்பது திசை திருப்புவதற்காகச் சொல்லப்படுகிறதா மருத்துவக் கல்வியைக் காப்பதற்காகச் சொல்லப்படுகிறதா என்பதை உள்துறை மந்திரி அறிவார்.

உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் மந்திரி, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடுதான் என்பதை உள்துறை மந்திரிக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை பா.ஜ.க. ஆண்டது. அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை மந்திரி, அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார். அமைதியான மாநிலம் என்பதால்தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு. இதனை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன. ஆனால், சட்டம் ஒழுங்கு மோசம் என்று உள்துறை மந்திரி பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்பிச் சென்றிருக்கிறார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை மந்திரி பேசிய காட்சியைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?

இன்றைய அ.தி.மு.க. பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பா.ஜ.க. தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை எனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அ.தி.மு.க.,வின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பா.ஜ.க. நிறைவேற்றப் பார்க்கிறது. பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.