மே.வங்காளத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
1 min read
Violence erupts in protest against Waqf Act in West Bengal
12.6.2025
வக்பு வாரிய திருத்த சட்டம் நாடளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிமிதிதா மற்றும் சுதி ஆகிய இரண்டு இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற போரட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிமிதிதா ரயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
ரயில் போக்குவரத்தை முடக்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்த போராட்டத்தினால் ரயில்வே சொத்துக்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் சிலர் காயம் அடைந்தனர். பதற்றத்தை தணிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி நிலைமை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல், டைமண்ட் ஹர்பர் பகுதியில் சாலையை மறித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக போலீசார் 10 பேர் காயம் அடைந்தனர்.