மேற்கு வங்காளத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி
1 min read
3 killed in West Bengal anti-Waqf law protests
13.4.2025
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. மேலும் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. நிம்ரிட்டா ரெயில் நிலையமும் சூறையாடப்பட்டது. ஜாங்கிபூர் பகுதியில் ஒரு கும்பல் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான கலிலுர் ரகுமான் அலுவலகத்தை சூறையாடியது.
முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. வன்முறையில் 2 பேர் பலியானதாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார்.
ஜாங்கிபூரி ல் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டம் பரவியது.
மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சுமார் 500 பேர்) மேற்கு வங்காளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.