July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பாளை மாணவருக்கு அரிவாள் வெட்டு- நயினார் நாகேந்திரன் கண்டனம்

1 min read

Nayinar Nagendran condemns slashing of Palai student

15.4.2025
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.

அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.