ரவுடி வரிச்சியூர் செல்வம் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்
1 min read
Rowdy Varichiyur Selvam appears in Virudhunagar court
15.4.2025
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு திடீரென செந்தில் குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், செந்தில் குமார் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அவரை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.
இதற்கிடையே வரிச்சியூர் செல்வம் மதுரையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களை அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை என்றும், கோவைக்கு சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து விருதுநகர் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்பாக அவர் ஆஜரானார்.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விருதுநகர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், ரவுடி வரிச்சியூர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான முதல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இன்று ஆஜரானேன். இதுவரை அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் நான் தவறாமல் ஆஜராகி வருகிறேன். என் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் முடித்து விட்டு நிம்மதியாக வாழ நான் ஆசைப்படுகிறேன்.
என்னை சுட்டு பிடிக்க போலீசார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் வீண் வதந்தி. காவல்துறை இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை. நான் எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எனக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் கிடையாது. காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். வழக்குகளை முடித்து விட்டால் நான் எனது பணிகளை தொடர்ந்து பார்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.