வெளிநாட்டு பணத்தை வைத்து யூனுஸ் நாட்டை அழிக்கிறார்- ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
1 min read
Sheikh Hasina accuses Yunus of destroying the country with foreign money
15.4.2025
வங்கதேசத்தில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதன்பின் அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீவா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. முகமது யூனுஸ் அரசை ஷேக் ஹசீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களிடம் வீடியோவில் உரையாற்றிய அவர், வங்கதேசத்தின் வரலாற்றை, குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவாமி லீக்கின் பங்களிப்புடன் தொடர்புடையவற்றை யூனுஸ் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது:-
“வங்காளதேச சுதந்திர இயக்கத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்படுகின்றன. சுதந்திரப் போராளிகள் அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து மாவட்டங்களிலும் நினைவகங்களை நாங்கள் கட்டினோம், ஆனால் அவை தற்போது எரிக்கப்படுகின்றன.
யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?. நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும். அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர் (யூனுஸ்), அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார்.
வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.