July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: மாணவனை அரிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

1 min read

14-day judicial custody for fellow student who slashed 8th grader with machete

16.4.2025
நெல்லை பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (மெயின்) உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரியர்கள் தேர்வுக்காக மாணவர்களை படிக்க வைத்துக்கொண்டு இருந்தனர். காலை 10.30 மணிக்கு 8-ம் வகுப்புக்கான ஒரு வகுப்பறையில் மாணவன் ஒருவர் தனது புத்தகப்பையில் இருந்து அரிவாளை வெளியே எடுத்தான்.

திடீரென முன்பெஞ்சில் அமர்ந்திருந்த சக மாணவனை சரமாரியாக வெட்டினான். இதில் அந்த மாணவனுக்கு தலை, தோள்பட்டை மற்றும் 2 கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ரேவதி வேகமாக வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் 2 கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

மாணவன் ரத்தவெள்ளத்தில் நின்றதை பார்த்து பதறிப்போன சக மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக மற்ற வகுப்பறைகளில் இருந்த ஆசிரியைகள் அங்கு ஓடி வந்தனர். உடனே அவர்கள், காயம் அடைந்த மாணவன் மற்றும் ஆசிரியை ரேவதியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் அங்கிருந்து வேகமாக வெளியேறி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு நடந்தே சென்று சரண் அடைந்தான். போலீசார் அவனிடம் விசாரித்தனர். விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 2 தரப்பு பெற்றோரையும் ஆசிரியர்கள் வரவழைத்து பேசி உள்ளனர்.

மேலும் வகுப்பாசிரியர் இருவரையும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் அமர வைத்துள்ளார். ஆனால், வெட்டிய மாணவன் இந்த பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு நேற்று அரிவாளை எடுத்துவந்து வெட்டியது தெரியவந்ததாக போலீசார் கூறினார்கள். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறார் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் தலைமையில் நேற்று இரவு விசாரணை நடைபெற்றது. அப்போது மாணவனை வரும் 29-ம் தேதி வரை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். மேலும் தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.