கருத்தடை செய்த பிறகும் குழந்தை; ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
1 min read
Child born after sterilization; Court orders compensation of Rs. 60,000
16/4/2025
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணியன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “தனது மனைவிக்கு கருத்தடை சிகிச்சை முறையாக செய்யாத தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடும்ப நல மருத்துவ அலுவலர் உரிய இழப்பீடை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப நல அலுவலர் அளித்த அறிவுறுத்தலின்பேரில், கடந்த 2018-ம் ஆண்டு மனுதாரரின் மனைவி நிரந்தர கருத்தடை சிகிச்சையை செய்துள்ளார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மனுதாரரின் மனைவி மீண்டும் கருவுற்ற நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
தமிழக அரசின் அரசாணைப்படி, கருத்தடை சிகிச்சை தோல்வியுறும்போது, இழப்பீடாக 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆகவே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடும்ப நல அலுவலர் இரண்டு வாரங்களுக்குள்ளாக 60 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.