கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயரை நீக்க ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
High Court orders removal of caste names in educational institutions within 4 weeks
16.4.2025
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உதரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஜாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கி, சங்க சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் துவங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர் பலகைகளில் ஜாதிப் பெயர்கள் இடம் பெறக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி, கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசு பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுவதாலும், கைகளில் ஜாதி கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதி உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.