போலீஸ் நிலையம் முன்பு பெண் தற்கொலை: தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
1 min read
Woman commits suicide in front of police station: Head constable transferred
16.4.2025
தஞ்சை அருகே உள்ள திருவையாறை அடுத்த நடுக்காவேரி அரச மர தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மகன் அய்யா தினேஷ்(வயது 32). இவர், பொது இடத்தில் கத்தியைக்காட்டி மிரட்டியதாக கூறி நடுக்காவேரி போலீசார் தினேஷை கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
இதனால் மனமுடைந்த தினேஷின் தங்கைகளான மேனகா(31), என்ஜினீயரான கீர்த்திகா(29) ஆகியோர் தனது அண்ணன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறும் கூறி போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர்.
அப்போது தங்களை அங்கிருந்த போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா பரிதாபமாக இறந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து பெண் என்ஜினீயர் விஷம் குடித்த விவகாரத்தை முறையாக கையாளாமல் விட்டதாக நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு பொறுப்பு வகிக்கும் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடுக்காவேரி காவல்நிலைய தலைமைக் காவலர் மணிமேகலை, உதவி காவல் ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.