1,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் சிறுசேரியில் தரவு மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
1 min read
Employment for 1,000 people: MK Stalin inaugurates data center in Siruseri
17.4.2025
தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,882 கோடி ரூபாய் முதலீட்டில் 1,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிஃபி நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் அமைத்துள்ள தரவு மையத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு 2024-25ஆம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில், தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழ்நாட்டினை, தரவு மைய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மைய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை 26.11.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
சிபி டெக்னாலஜீஸ் நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில், 40 மெகாவாட் மின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், ஒரு அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் 1,882 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த அதிநவீன தரவு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். 2027-ஆம் ஆண்டிற்குள், சென்னையில், 13,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்நிகழ்ச்சியில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.