July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

வக்பு திருத்த சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு

1 min read

Supreme Court issues interim order on Waqf Amendment Act

17/4/2025
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்றது. மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘வக்பு சட்ட திருத்தம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்த ரிட் மனுக்களை ஐகோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிடக்கூடாது.

மாறாக வக்பு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார். தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘பொது ஒழுங்கு, பொது சுகாதாரம் போன்றவை பாதிக்கப்படும்போது மட்டுமே இயற்றப்படும் கட்டுப்பாடுகளைக் கொண்ட சட்டங்களை வக்பு சட்ட திருத்தம் கொண்டுள்ளது. இது மதம் சார்ந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை பறிக்கிறது’ என வாதிட்டார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு அது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து 38 கூட்டங்களை நடத்தி 98.2 லட்சம் கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. அதன்பிறகே நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இச்சட்ட திருத்தத்தில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகி இருப்பது வக்பு அனுபவ சொத்து தொடர்புடைய பிரிவாகும்’ என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வக்பு சொத்துகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளை செயல்படுத்தக்கூடாது.

வக்பு வாரியங்களிலும், மத்திய வக்பு கவுன்சிலிலும் அலுவல்வழி உறுப்பினர்கள் இருவரை தவிர அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பன போன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பி்க்க உத்தேசித்து உள்ளோம். இவை தொடர்பாக வாதங்களை இன்று பி்ற்பகல் 2 மணிக்கு முன் வைக்கும் வகையில் விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது’ என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில், இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துக்கள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், சுப்ரிம்கோர்ட்டு இடைக்கால உத்தரவு வழங்கக் கூடாது என்று சொலிசிடர் ஜெனரல் வாதத்தை முன்வைத்தார். மேலும், மத்திய அரசு தரப்பில் ஆவணங்களை சமர்பிக்க 7 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, வழக்கு முடியும் வரை புதிய சட்டத்தின்படி வாரியத்தின் உறுப்பினர்கள் நியமனம் எதுவும் நடைபெறக்கூடாது, 1995 சட்டத்தின் கீழ் பதியப்பட்ட சொத்துகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்ற உறுதி சொலிசிடர் ஜெனரல், வழக்கு முடியும் வரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள், மாநில வாரியங்களில் நியமிக்கப்பட்டால் அது செல்லாததாக கருதப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி, “மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க 7 நாள்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை தேதி வரை புதிய சட்டத்தின் கீழ் வாரிய உறுப்பினர் நியமனம் நடைபெறாது என்று சொலிசிடர் ஜெனரல் உறுதியளித்துள்ளார். 7 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அடுத்த விசாரணையில் 5 மனுதாரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். நீங்களே 5 பேரைத் தேர்ந்தெடுக்கவும். மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டவையாக கருதப்படும்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.