July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மகளுக்கு நிச்சயித்த வாலிபருடன்தான் வாழ்வேன் என பெண் அடம்

1 min read

Woman insists she will only live with the young man her daughter is engaged to

16.4.2025
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஒரு வாரத்திற்கு பின் அந்த ஜோடி போலீசில் சரணடைந்தனர். அப்போது நான் எனது மருமகனையே திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த பெண் போலீசாரிடம் பிடிவாதமாக கூறி வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் சப்னா. இவரது கணவர் ஜிஜேந்திரகுமார். இந்த தம்பதியின் மகள் ஷிவானி. இவருக்கு திருமணம் செய்ய ராகுல் குமார் என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள். ஆனால் இங்கு வினோதமாக பெண்ணின் தாய் சப்னா மருமகன் ராகுல்குமாரிடம் மணிக்கணக்கில் பேசி வந்தார்.

அப்போது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏன் மருமகனிடம் போனில் அதிக நேரம் பேசுகிறாய் என்று கணவர் கேட்டுள்ளார். திருமண ஏற்பாடு சம்பந்தமாக பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த வாரம் மருமகன் ராகுல்குமாருடன் மாமியார் சப்னா திடீரென ஓட்டம் பிடித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சப்னா-ராகுல்குமார் ஜோடி டாடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரிடம் சப்னா நான் ராகுல் குமாரையே திருமணம் செய்து கொள்வேன். நான் வீட்டில் இருந்து செல்லும் போது ஒரு செல்போனும், ரூ.200 மட்டுமே என்னிடம் இருந்தது.

லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் நான் ஓடி விட்டதாக எனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நான் எதையும் எடுத்து செல்லவில்லை. எனது கணவரும், மாமியார்களும் என்னை சித்ரவதை செய்தனர். எனது கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். எனது மகளும் என்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என குற்றம்சாட்டினார். இதனால்தான் இவ்வாறு செய்தேன் என்றார்.

என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன். அவரை திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவோம் என்று அவர் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினார்.

ராகுல்குமார் கூறும் போது, சப்னா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியதால் அவருடன் ஓடிப்போக ஒப்புக் கொண்டேன். அலிகார் பஸ் நிலையத்தில் நான் அவரை சந்திக்கவில்லை என்றால் அவர் தற்கொலை செய்திருப்பார். அதனால்தான் நான் சென்றேன்.

நாங்கள் முதலில் லக்னோவுக்கு சென்றோம். அங்கிருந்து முசாபர்பூருக்கு சென்றோம். போலீசார் தங்களை தேடுகிறார்கள் என்பதை அறிந்து சரணடைந்தோம் என்றார். சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று போலீசார் கேட்டபோது, முதலில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர் சிறிது நேர மவுனத்திற்கு பின்னர் அவரை திருமணம் செய்வேன் என்றார்.

சப்னாவின் குடும்பத்தினர் எங்களுக்கு சப்னா திரும்ப வேண்டாம். அவர் வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகை, பணத்தை மட்டும் மீட்டு தாருங்கள் என்று போலீசாரிடம் கூறினர்.

மகளுக்கு நிச்சயித்த மருமகனையே மாமியார் திருமணம் செய்து கொள்வேன் என்ற அடம்பிடித்த இந்த சம்பவம் போலீசார் மட்டும் அல்ல அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.