July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணைக்கு தடை

1 min read

Young woman commits suicide in front of police station: Police investigation suspended

17.4.2025
தஞ்சையை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ் (வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா அரசு பணி தேர்வுக்காக படித்து வந்தார்.

இந்த சூழலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு வழக்கு விசாரணைக்காக தினேசை மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். உடனே தினேசின் உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது மேனகா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

.ஆனால் தினேஷ் மீது பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ததாக கூறியதுடன் மேனகா, கீர்த்திகா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் போலீஸ் நிலையம் முன்பு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனையடுத்து சகோதரிகள் இருவரும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்ரல் 11-ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் ஆகியோர் 16 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தவிர தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ஆய்வாளர் சர்மிளா உள்பட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரசமரத் தெருவில் தொடர்ந்து 8-வது நாளாக வியாழக்கிழமையும் உறவினர்கள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் நடுக்காவேரிக்கு சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடமும் விசாரித்தனர். இதுதொடர்பான அறிக்கையைத் தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இளம்பெண் கீர்த்திகா தற்கொலை விவகாரத்தை நடுக்காவேரி போலீசார் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்துள்ளது.

மேலும் உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்வது குறித்து மனுதாரர் துர்கா முடிவு செய்ய வேண்டும் என்றும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற கோருவது பற்றி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.