கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே தலை துண்டித்து வாலிபர் கொலை – 4 பேர் கைது
1 min read
Youth beheaded in front of wife in Keelapuliyur, kills himself – 4 arrested
17.4.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் குத்தாலிங்கம் (வயது 35). இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
குத்தாலிங்கம் தனது மனைவியின் ஊரான தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் கடந்த 3 மாதங்களாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் கார்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் உணவுப்பொருட்களை வாங்குவதற்காக குத்தாலிங்கம், மனைவி தனலட்சுமி சென்றனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக குத்தாலிங்கம் வரிசையில் நின்றார்.
அப்போது அப்பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று ரேஷன் கடைக்குள் பாய்ந்து சென்றது. அங்கிருந்த குத்தாலிங்கத்தை மர்மநபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி தனலட்சுமி கூச்சலிட்டவாறு தடுக்க முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் காசிமேஜர்புரம் அம்மன் கோவில் முன்பு குத்தாலிங்கத்தின் தலையை வீசிச் சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு தமினியன், இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காசிமேஜர்புரம் அம்மன் கோவில் முன்பிருந்த குத்தாலிங்கத்தின் தலையையும், கீழப்புலியூர் ரேஷன் கடையில் இருந்த அவரது உடலயைும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், காசிமேஜர்புரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அம்மன் கோவில் முன்பாக பட்டுராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் குத்தாலிங்கத்தின் தம்பிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. எனவே பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக குத்தாலிங்கத்தை கொலை செய்து, பட்டுராஜ் உடல் கிடந்த இடத்திலேயே குத்தாலிங்கத்தின் தலையை வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காசிமேஜர்புரத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கண்முன்னே இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.