டாஸ்மாக் முறைகேடு வழக்கு: நாளை மறுநாள் ஐகோர்ட்டு தீர்ப்பு
1 min read
TASMAC corruption case: High Court verdict the day after tomorrow
21.4.2025
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் (மார்ச்) அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக பரபரப்பாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனையை சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, “சட்டத்தை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். சில அதிகாரிகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் இரவில் தூங்கவிடவில்லை. இது மனித உரிமை மீறல்” என்று அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் வாதிட்டது.
ஆனால், அமலாக்கத்துறை சார்பில், “சட்டத்துக்கு உட்பட்டே இந்த சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. பெண் அதிகாரிகளை இரவில் தங்கவைக்கவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில், வரும் 23-ந் தேதி (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.