அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல் அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min read
The Chief Minister is scared after seeing the AIADMK-BJP alliance: Edappadi Palaniswami interview
21.4.2025
தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் காரசார வாதங்களை முன்வைத்தனர்.
“திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நீட் கொண்டுவரப்பட்டது. பிள்ளையார் சுழி போட்டது நீங்கள்தான்” என்று முதல்-அமைச்சரை நோக்கி தலைவர் பழனிசாமி கூற, அதற்கு “நீட் சிக்கலை போக்க அதிமுகவுக்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது; நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என சொல்லுமா அதிமுக?” என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வியெழுப்பினார்.
இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“2010 டிசம்பரில்தால் நீட் தேர்வுக்கான ஆரம்பப் புள்ளி தொடங்கியது. திமுக-காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக போராடியது. நீட் தேர்வு பற்றி பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டேன்.
திருவிழாவில் மோர் உள்ளிட்டவை குடித்த மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது. சித்திரை திருவிழாவிற்கு உறையூர் பகுதி மக்கள் மட்டும்தான் சென்றார்களா? உறையூர் பகுதி மக்களுக்கு மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது ஏன்?
திமுக-பாஜக கூட்டணி சேர்ந்தபோது நாங்கள் கூட்டணி சேர்வதில் மட்டும் என்ன தவறு? அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல்-அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் இப்படி பேசுகிறார். முதல்-அமைச்சர் பதற்றப்படுவதை சட்டசபையில் நேருக்கு நேர் பார்த்தேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.