கடலூர் அருகே கார் மோதியதில் 3 பேர் பலி
1 min read
3 killed in car collision near Cuddalore
கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் நேரு ( வயது 55). இவர் எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாவின் கணவர் ஆவார். இவர் தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக இன்று காலை 8 மணி அளவில் நாகிநத்தம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மனைவி சரண்யா (25), பாலாஜி மனைவி கல்பனா (25) ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரண்யா, கல்பனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்றபோது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.