திருச்செந்தூரில் கோஷ்டி மோதல் 5 பேருக்கு அரிவாள் வெட்டு- 15 பேர் கைது
1 min read
5 people hacked to death with sickles in factional clash in Tiruchendur – 15 arrested
22.4.2025
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (வயது 60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார்.
அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.