கூகுளில் கொலை செய்வது குறித்து தேடிய முன்னாள் டிஜிபி மனைவி
1 min read
Former DGP’s wife searches for murder on Google
22.4.2025
கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 68). முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. இவரது மனைவி பல்லவி. இவர்களுக்கு கார்த்திகேஷ் என்ற மகனும், கிருதி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசுக்கு திருமணமாகி விட்டது. கிருதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. குடும்பத்தகராறு மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் மகன் கார்த்திகேஷ் தனது தாய், தங்கை மீது பரபரப்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓம்பிரகாஷின் மனைவி பல்லவியை கைது செய்தனர். அவரது மகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
போலீசாரின் விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மேலும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி ஓம்பிரகாஷ் துப்பாக்கியை காட்டி மனைவி, மகளை மிரட்டியதும் பதிலுக்கு அவர்கள் ஓம் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாகவே சம்பவத்தன்றும் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஓம்பிரகாஷை அவரது மனைவி பல்லவி கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் பல்லவியின் செல்போனை கைப்பற்றி சோதனை நடத்திய போது அவர் தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்து கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை காட்டியதும் தெரியவந்தது.
அதோடு இல்லாமல் ஓம் பிரகாஷ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பல்லவி கூகுளில் கழுத்து பகுதியில் எந்த நரம்பு மற்றும் ரத்த நாளங்களை வெட்டினால் ஒருவர் மரணம் அடைவார் என்று தேடியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் ஓம்பிரகாசை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.