கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை பாதுகாக்க ரூ.67.8 கோடி
1 min read
Rs 67.8 crore to protect Google CEO Sundar Pichai
2.5.2025
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரை நகரை சேர்ந்தவரான இவருடைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக கூகுளின் தலைமை நிறுவனம் என கூறப்படும் ஆல்பபெட் நிறுவனம், செலவு செய்த தொகையை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்திடம் இந்நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றின்படி, கடந்த 2024-ம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு 8.27 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய ரூ.67.8 கோடி) செலவிடப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.
இது, அதற்கு முந்தின ஆண்டின் செலவை விட 22 சதவீதம் அதிகம் ஆகும். முந்தின ஆண்டில் 6.78 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.57.48 கோடி) செலவிடப்பட்டது.
சுந்தர் பிச்சையின் இல்லத்திற்கான பாதுகாப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள், கண்காணிப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் விரிவான பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு இந்த தொகை செலவிடப்பட்டு உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கைகள் சி.இ.ஓ.வுக்கான ஒரு தனிப்பட்ட பலனாக கருத்தில் கொள்ளப்படாது என விளக்கமளித்த ஆல்பபெட், ஆனால் அவருடைய தொழில்முறை பொறுப்பை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக கூகுளை வழிநடத்தி செல்லும் அவர் பல வகையில் பணப்பலன்களை பெற்று வருகிறார்.
அந்த அறிக்கையில், கூகுளின் தலைமை சட்ட அதிகாரியான கென்ட் வாக்கர் என்பவருக்கு அளித்துள்ள சம்பள உயர்வு பற்றிய விவரமும் வெளிவந்துள்ளது. இதன்படி, 2024-ம் ஆண்டில் கென்ட்டின் மொத்த சம்பளம் 30.2 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.256.2 கோடி தோராய அடிப்படையில்) ஆக உள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டில் அவர் ஈட்டிய 27.3 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.231.6 கோடி) விட அதிகம் ஆகும்.