கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
1 min read
6 killed in Goa stampede
3.5.2025
கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஷிர்காவ் கிராமத்தில் உள்ள லைராய் தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் சரிவான பாதை வழியாக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.