July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்க இந்தியா புதிய திட்டம்

1 min read

India’s new plan to cripple Pakistan’s economy

3.5.2024
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்திய வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் வினியோகத்தை மத்திய அரசு அடியோடு நிறுத்தி வைத்தது. 1960-ம் ஆண்டில் சிந்துநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானில் பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்புக்குழு இயங்கி வருகிறது.

இந்த குழு தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் நடக்கிறது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். இந்த உத்தரவை நிறைவேற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடு ‘கிரே’ பட்டியலில் வைக்கப்படும்.

கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தீவிரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதி அளித்ததை தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபரில் ‘கிரே’ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே’ பட்டியலில் கொண்டு செல்ல முயற்சி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் ‘கிரே’ பட்டியலில் இணைந்தால் அது அந்த நாட்டுக்கு மிகப்பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும்.

இதனால் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரம் மேலும் ஆட்டம் காணும். எனவே அடுத்த மாதம் கூடும் எப்.ஏ.டி.எப். கூட்டத்தொடருக்கு முன்பு முக்கிய உறுப்பு நாடுகளுடன் பேசி பாகிஸ்தானை ‘கிரே’ பட்டியலில் இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், பொருளாதார ரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் தொகுப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச அமைப்புகளின் நிதியை பாகிஸ்தான் நாடு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தவறாக பயன்படுத்துவதாக சொல்லி அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவும் பாகிஸ்தானுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

மேற்கண்ட 2 சர்வதேச அமைப்புகளும் பாகிஸ்தானுக்கான நிதியை தடை செய்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் மீது நேரடி போராக அல்லாமல், அந்த நாட்டிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் புது வகையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக அமையும் என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.