இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; 12-ந் தேதி பேச்சுவார்த்தை!
1 min read
India-Pakistan ceasefire; talks to be held on the 12th!
10.5.2025
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், நமது நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
தாக்குதல் துவங்கியது முதல் இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. சீனாவும் அதேபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தது. இரு நாடுகளும் விரைவில் பதற்றத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ” இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12ம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், ” என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ. வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டு உள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனத் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் ஏற்பட்டது.