பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – மோடி உறுதி
1 min read
PM Modi assures befitting reply if Pakistan attacks
11.5.2025
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.
ஆனால் நேற்று இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. தொடர் தாக்குதல்களால் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் மேற்கு எல்லையில் பாதுகாப்பு நிலையை ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மதிப்பாய்வு செய்தார். இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவ படைகளுக்கு முழு அதிகாரத்தை அவர் வழங்கியுள்ளார் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.