திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவு- 33 பேர் கைது
1 min read
Tirunelveli: 33 people arrested for disrupting law and order
11.5.2025
திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல் துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, இத்தகைய சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும் உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களில் தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சமூக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடிய பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகள் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளையும் நோக்கில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், மேற்சொன்ன நபர்களின் சமூக வலைதளக் கணக்குகளில் பின்தொடர்புடையவர்களின் பதிவுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இதில் சட்டப்பூர்வ முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவரும் பட்சத்தில், அவர்கள்மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கைது செய்யப்படும் நபர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள், வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்டவை முழுமையாக கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. இதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள்மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின் பேரில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் மூலம், ஜாதி சார்ந்த பிரச்சினைகளின் தீவிரம் மற்றும் அதன் சமூகப் பின்விளைவுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள் மீது காவல்துறையின் சமூக ஊடக பிரிவு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. 2024-ம் ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டு இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை உருவாக்கும் மற்றும் பரப்பும் நபர்கள்மீது நடவடிக்கைகள் மிகக் கடுமையாக, எந்தவித சமரசமும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்பதை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் நோக்குடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.