பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக பேட்டி
1 min read
The DGMOs of the three forces held a joint interview about the repulse of the Pakistan attack
12/5/2025
விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகிய முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் நேற்று கூட்டாக நிருபர்களை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேட்டியளித்தனர்.
இதில் ராஜீவ் காய் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளில் போரின் தன்மையே மாறியிருக்கிறது. காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீதும், ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுவே அதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.
பாகிஸ்தானில் இருந்துதான் தாக்குதல் வரும் என முன்பே தெரிந்திருந்தது. இதனால், வான் பாதுகாப்பு அமைப்பு தயார் நிலையில் இருந்தது. பல அடுக்குகளும், நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை தயாராக வைத்திருந்தோம்.
பல அடுக்குகளில் ஒன்றை தாக்கினால், மற்றொரு அடுக்கு எதிரியை வீழ்த்தும். பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு, அனைத்து டிரோன்களையும், ஏவுகணைகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது என்றும் கூறியுள்ளார்.
முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என்று கூறியுள்ளார்.
ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி கூறும்போது, இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. துருக்கி மட்டுமல்ல எந்த நாட்டு டிரோன்களை கொண்டு தாக்கினாலும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடிக்கும்.
எங்களுடைய வேலையை சரியாக முடித்து விட்டோம். எத்தனை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்விக்கு பாகிஸ்தானுடனான சண்டை பற்றிய முழு விவரங்களையும் கூற முடியாது என்று அவர் கூறினார்.
மத்திய அரசின் துணையால் வலிமையடைந்தோம். 10 ஆண்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையடைந்து உள்ளது. மத்திய அரசு நிதி ரீதியாக, கொள்கை ரீதியாக பல வழிகளில் துணை நின்றது என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, ஏ.என். பிரமோத் செய்தியாளர்களிடம் கூறும்போது, அனைத்து தளங்களில் இருந்தும் வந்த தாக்குதல்களை முறியடித்து உள்ளோம். கடற்படை கண்காணிப்பு தொடர்கிறது. ஆபத்து ஏதேனும் வருகிறது என்றால் உடனடியாக கண்டுபிடித்து முறியடிக்கப்படும்.
வணிக, போர் விமானங்களை அடையாளம் காணும் உயர் தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது என கூறியுள்ளார். முப்படைகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தது. அதனால், எதிரி விமானங்களால் நம்மை நெருங்க கூட முடியவில்லை. எதிரியை பல 100 கி.மீ. தொலைவிலேயே நிறுத்தி விட்டோம் என பிரமோத் பெருமிதத்துடன் கூறினார்.
தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமுடன் தாக்கும் திறன் நம்முடைய இந்திய கடற்படையிடம் இருக்கிறது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் விழிப்புணர்வோடு இருக்கின்றன என பிரமோத் கூறியுள்ளார்.