இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்- இஸ்ரோ தகவல்
1 min read
We monitor India’s security through 10 satellites – ISRO information
12/5/2025
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை, 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் பேசியதாவது:-
இந்தியா ஒரு “துடிப்பான விண்வெளி சக்தியாக” மாறி வருகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் முதல் விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்கும். 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்து ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளன
இந்தியாவின் பாதுகாப்பை, 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் 7 ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் வடபகுதியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் வசதியில்லாமல் இவற்றை சாத்தியப்படுத்த முடியாது.
ஜி20 நாடுகளுக்காக காலநிலை, காற்று மாசுபாட்டை ஆய்வு செய்வதற்கும் வானிலையை கண்காணிப்பதற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாடு அடைந்துள்ள முன்னேற்றம் “அற்புதமானது… சிறப்பானது”. இவ்வாறு அவர் கூறினார்.