ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி- வீரர்களுடன் கலந்துரையாடினார்
1 min read
PM Modi visits Adampur Air Force Base, interacts with soldiers
13.5.2025
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்த நிலையில், இரு நாட்டு எல்லை பகுதிகளில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றார்.
அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்த அவர், துணிச்சல் மிகு வீரர்களிடம் கலந்துரையாடினார். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து பிரதமரிடம் வீரர்கள் விவரித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது;
“இன்று காலை, ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான விமான படை வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டிற்காக நமது வீரர்கள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.