பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவரம்
1 min read
Pollachi sex case – a look
13.4.2025
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண்கள் பாலி யல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27) சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரன்பால் (29), பாபு என்ற மைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் 2021-ம் ஆண்டு கைதானார்கள்.
இவர்கள் 9 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோவை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கைதானவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
அதன்பிறகு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு, நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்காக சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியமும் அளித்தனர்.
இந்த வழக்கில் ஒவ்வொரு வாய்தாவின் போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் ஜெயிலில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவும், நேரிலும் நீதிபதி முன்பு ஆஜராகி வந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தனர். இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம்28-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்து நிறைவு பெற்று விட்டது. எனவே மே 13-ந் தேதி (அதாவது இன்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி கோவை மகிளா கோர்ட்டில் இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் இன்று காலை சேலம் மத்திய ஜெயிலில் இருந்து போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டன. கோர்ட்டுக்குள் வக்கீல்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நீதிபதி நந்தினி தேவி, வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அவர் தீர்ப்பு கூறினார். 9 பேர் மீதான தண்டனை விவரம் இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பின்னர் மதியம், நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். பெண்களுக்கு இழைக்கப்பட்டது கொடும் குற்றமாகும். எனவே குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள்தண்டனை விதிப்பதாக கூறி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கும் மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 2-வது குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 3-வது குற்றவாளியான சதீசுக்கு 3 ஆயுள் தண்டனையும், 4-வது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 5-வது குற்றவாளியான மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், 6-வது குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள்தண்டனையும், 7-வது குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், 8-வது குற்றவாளி அருளானந்தம், 9-வது குற்றவாளி அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை முன்னிட்டு கோவை கோர்ட்டு வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.