103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்- மோடி நாளை திறந்து வைக்கிறார்
1 min read
PM Modi to inaugurate 103 Amrit Bharat Railway stations across the country tomorrow
21.5.2025
‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரெயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரெயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரெயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, நாளை திறந்து வைக்க உள்ளார்.சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அம்ரித் பாரத் ரெயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாகவும், முகப்புப்பகுதியை மேம்படுத்துவது, ரெயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5-ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் என்று நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகளுடன் ரெயில் நிலையங்கள் புத்துருவாக்கப்பட்டுள்ளன.