ஜம்மு காஷ்மீரில் ‘ஆபரேஷன் த்ராஷி’ தீவிரம்-2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
‘Operation Trashi’ intensifies in Jammu and Kashmir – 2 terrorists killed
22.5.2025
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 22-ந் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கையால், கேலர் மற்றும் நடர் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்கும் பணிகள் தொடர்ந்து முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. ‘ஆபரேஷன் த்ராஷி’ என்ற பெயரில் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
3 அல்லது 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டு விட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இது குறித்து ராணுவத்தின் ஒரு பிரிவான வெள்ளை நைட் படைப்பிரிவு விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் த்ராஷி’ என்ற பெயரில் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் உடனான பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை வீழ்த்தும் பணி தொடர்ந்து வருகிறது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.