டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
1 min read
Supreme Court stays hearing of Tasmac Karup’s case
22.5.2025
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், ‘அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறி விட்டது. கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். இதனை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (மே 22) தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிடுகையில், ”2014-21ம் ஆண்டு வரையிலான விற்பனையில் முறைகேடு தொடர்பாக மாநில அரசே, 41 வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆனாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி உள்ளனர். அதிகாரிகளின் மொபைல் போன்களை கைப்பற்றி உள்ளனர்” என தெரிவித்தார்.
டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கி வாதிடுகையில், ” டாஸ்மாக் அதிகாரிகளின் போன்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவற்றில் இருந்த தகவல்கள் அனைத்தையும் நகல் எடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்களது தனியுரிமை பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
வரம்பு மீறல்
இதையடுத்து, தலைமை நீதிபதி கவாய் அமர்வு கூறியதாவது:
- முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? டாஸ்மாக் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கபில் சிபல் வாதிடுகையில், ”டாஸ்மாக் அதிகாரிகளின் போன்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை அமலாக்கத்துறை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இது தனி உரிமைக்கு உட்பட்டது,” என்றார்.அதற்கு தலைமை நீதிபதி, ”நாங்கள் ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்து விட்டோம். இதற்கு மேலும் உத்தரவு பிறப்பிக்க முடியாது,” என்றார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ வாதிடுகையில், ”இது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு. அதனால் தான் விசாரிக்க வேண்டியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மோசடி. அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுகின்றனர்,” என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி, ”மாநில அரசு தான் வழக்குகள் பதிவு செய்துள்ளதே? அமலாக்கத்துறை ஏன் தேவையின்றி வருகிறது. இதற்கான மூலக்குற்றம் எங்கே,” என்று கேள்வி எழுப்பினார்.
தலைமை நீதிபதி, ”அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது. தனி நபர்கள் செய்த தவறுக்காக அரசு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? நாட்டின் கூட்டாட்சி நடைமுறைகளை அமலாக்கத்துறை மீறுகிறது,” என்றார்.
இதை மறுத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினார்.