“மத அடிப்படையில் சிறுபான்மையினர் என அழைக்க கூடாது” – சீமான் பேச்சு
1 min read
“We should not call them minorities on religious grounds” – Seeman’s speech
22.5.2025
சென்னையில் கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் உலக தமிழ் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் ‘வழக்காடுவோம் வாருங்கள்’ என்கிற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்விகள் கேட்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், சீமான் இதற்கு முன்பு கிறிஸ்தவர்கள் பற்றி மேடைகளில் பேசிய பேச்சு குறித்து கேள்விகள் கேட்டனர்.
அப்போது பெரியார் பற்றிய மேடைகளில் இதற்கு முன்பு நீங்கள் பேசிய பேச்சுகள் தற்போது சமூகவலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறதே? அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
இளம் வயதில் இருந்தே கடவுள் மறுப்பு சிந்தனையுடன் வளர்ந்தவன் நான். இதனால் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு பற்றி பெரியார் இயக்க மேடைகளிலும், மார்க்சிய மேடைகளிலும் பலமுறை பேசி இருக்கிறேன். 12 ஆண்டுகளாக அது போன்ற மேடைகளில் எனது பேச்சு ஒலித்து இருக்கிறது.
அப்போது நான் கிறிஸ்தவ வழிபாடு பற்றியும், இயேசுவை பற்றியும் பேசிய பேச்சுகளை அரசியலில் நான் எங்கே வளர்ந்து விடுவேனோ என கருதி பயத்தில் உள்ள திராவிட ஆதரவாளர்கள் தற்போது ப பரப்பி வருகின்றனர்.
கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்த போது நான் எல்லா மதத்தையும் பற்றி பேசி இருக்கிறேன். அதில் நான் பேசியதை முழுமையாக கேட்காமல் சில பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து பரப்பி உள்ளார்கள். கிறிஸ்தவர்களை பற்றியும் பேசி உள்ளேன். ராமரை பற்றியும் பேசி உள்ளேன்.
நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு அரசியலில் நான் எந்த கருத்துக்களை பேசுகிறேன் என்பதை தான் பார்க்கவேண்டும். அதை விட்டு விட்டு திராவிட அரசியலை பேசுபவர்கள் அச்சத்தில் பரப்பி வரும் எனது பழைய வீடியோக்களை பற்றி நீங்கள் கவலைக்கொள்ளாதீர்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பற்றி மேடைகளில் நான் பேசியது தவறு தான். பெரியாரே பெரும் தவறு தான். இன்று பலர் தமிழகத்தில் பெரியார் மண் என சொல்கிறார்கள்.
பெரியாரே ஒரு மண் தான். தமிழகத்தில் சொந்த பெரியார்கள் ஆயிரம் பேர் உருவாகி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வந்த பெரியார் தமிழகத்தில் தேவை இல்லை. பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா? என கேட்ட கருணாநிதியை மன்னித்து விட்டீர்கள்.. என்னை மன்னிக்க மாட்டீர்களா? எனவே இப்போது நான் பேசுவதை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்களும். இஸ்லாமியர்களும் சிறு பான்மையினர் இல்லை என்று நான் தொடர்ந்து கூறுவது பற்றியும் கேட்கிறீர்கள், அவர்கள் தமிழர்களாக இருக்கும் போது வழிபாட்டு முறையை மட்டுமே வைத்து எப்படி சிறுபான்மையினர் என்று அழைக்க முடியும் என்பது தான் எனது கருத்து.
தெலுங்கர்கள். மலையாளிகள், கன்னடர்கள் தான் சிறுபான்மை யினர் ஆவர். தமிழகத்தில் ஆட்சி புரிந்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரும் மத அடிப்படையில் சிறு பான்மையினர் என்றே கூறி வருகின்றனர், அது ஏற்பு டையது இல்லை என்பது தான் எனது கருத்து ஆகும்.
இவ்வாறு சீமான் பேசினார்.