வங்கதேச தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நீடிக்கிறார்
1 min read
Muhammad Yunus to remain as Bangladesh’s chief adviser
25.5.2025
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்தார்.
இடைக்கால அரசு பொறுப்பேற்று 6 மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்ற விஷயத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே, தலைமை ஆலோசகர் பதவியை முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் யூனுஸ் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை. அடுத்த 5 ஆண்டுக்கு யூனுசே தலைமை ஆலோசகராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், வங்கதேச அரசியல் ஆலோசகர்கள் அடங்கிய அமைச்சரவை கூட்டம் முகமது யூனுஸ் தலைமையில் டாக்காவில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்தும், தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் பேசிய திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத், நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு நடுவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து வருகிறோம். தலைமை ஆலோசகர் யூனுஸ் எங்கள் வழிகாட்டியாக இருந்து வழி நடத்தி வருகிறார். பல சவால்களையும் கடந்துதான் பணிசெய்து வருகிறோம். கூட்டத்தின்போது தலைமை ஆலோசகரின் ராஜினாமா குறித்த பேச்சு எழுந்தது. அந்த பதவியில் அவர் நீடிக்கவேண்டும் என வலியுறுத்தினோம். அவர் அதை ஏற்றுக்கொண்டார். இடைக்கால அரசின் தலைவராக அவர் நீடிப்பார் என தெரிவித்தார்.