இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு
1 min read
The number of corona cases in India has increased to 1,009
26.5.2025
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
விமானம், ரெயில், பஸ் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் முதல் மற்றும் 2-ம் அலையின்போது தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டது. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதவிர பூஸ்டர் டோஸ்களும் போடப்பட்டன. இதன்பின்னர் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 45 லட்சத்து 11 ஆயிரத்து 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை நாட்டில், 220 கோடியே 68 லட்சத்து 94 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் நேற்று வரை 257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. டெல்லி, மராட்டியம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.