நீலகிரியில் கன மழை: கிராம மக்கள் வெளியேற்றம்
1 min read
Heavy rains in Nilgiris: Villagers evacuated
27.5.2025
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை முழுவதுமாக நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட்டுள்ளது.
அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவை வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. ஊட்டியில் இருந்து உல்லத்தி கிராமத்திற்கு செல்லும் சாலை, புதுமந்து செல்லும் சாலை, ஜல்லிக்குழி செல்லும் சாலை உள்பட பல்வேறு கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.
அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது. கிண்ணக்கொரை பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு குன்னூர், ஊட்டி, கூடலூர், குந்தா, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வரை 67 மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மரங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
பலத்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே மண்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் இத்தலார்-பெம்பட்டி சாலையில் 100 அடி தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் வாகனம் மூலம் மண்சரிவை சீரமைத்தனர். பந்தலூர் நாயக்கன் சோலை, ஊட்டி மஞ்சனக்கொரை அன்பு நகர், சேரனூர், பிக்கட்டி பகுதிகளிலும் சாலையோரங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தேவாலா அட்டியில் கனமழையால் வேலு என்பவரின் வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டதால் வீடு அந்தரத்தில் தொங்குகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமான காரணத்தால் நஞ்சநாடு, கப்பத்தொரை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஓடைகள் முழுவதும் நிரம்பி வெள்ளம், ஓடைகளையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இந்த பகுதிகளில் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்பட்டு இருந்தன.
இந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக முத்தொரை பாலடா பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பந்தலூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சாகுபடிக்கு தயாராக நின்ற 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள கில்லூர், தேவன் எஸ்டேட், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மரங்கள் மீது விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் தடைபட்டுள்ளது.
சேரனூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மீது ராட்சத மரம் விழுந்தது. இதனால் சேரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 கிராமங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. இதேபோல் தங்கநாடு தோட்டம், மட்டகண்டி, கோரகுந்தா பகுதிகளிலும் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகர பகுதியில் நேற்று முதல் இன்று வரை 2 நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளனர்.
தொடர்ந்து இன்று 4-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.