“தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்” என்ற கமலுக்கு கண்டனம் வலுக்கிறது
1 min read
Condemnation grows for Kamal’s statement that “Kannada was born from Tamil”
28/5/2025
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள ‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார்.
அவரது இந்த கருத்து கன்னட அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை கமல் அவமதித்துவிட்டார். கமலின் பேச்சு அநாகரிகமானது, ஆணவத்தின் உச்சம். நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டிய கமல் மத உணர்வுகளை புண்படுத்தினார். கன்னட மக்களிடம் கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.
கமல்ஹாசன் கன்னடர்களை இழிவுபடுத்திவிட்டார் என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்ற கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெங்களூருவில் கமல் நடித்த தக் லைப் பட போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.
இந்தநிலையில், பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார் என்றார். மேலும் கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.