சிவகிரி அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
1 min read
2 women arrested for attacking woman and stealing jewelry near Sivagiri
29.5.2025
தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் சரகத்திற்கு உட்பட்ட குமாரபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து அவரிடம் இருந்து தங்க நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம்
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின் கம்மல் உள்ளிட்ட தங்கநகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி. எஸ்பி.மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர்
கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 50) இவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு முன்பழக்கம் கொண்ட சொக்கநாதபுரத்தை சேர்ந்த மாரி என்ற பூ மாரி (வயது 40) அவள் மகள் மதுமிதா இருவரும் கடந்த 27.05.25 அன்று இரவு 7:30 மணிக்கு செல்வி வீட்டுக்கு வந்து தனியாக இருந்த செல்வியிடம் பேசிக் கொண்டிருந்தனர்
அப்போது எதிர்பாராத விதமாக மதுமிதா அணிந்திருந்த துப்பட்டாவை செல்வியின் கழத்தில் போட்டு நெருக்கி தலையனையை செல்வி முகத்தில் அமுக்கியுள்ளனர். இதனை எதிர்பாராத செல்வி மயக்கமடைந்துள்ளார்.
அப்போது செல்வியிடமிருந்து தங்க செயின் கம்மல் மாட்டி சுமார் உள்ளிட்ட மூன்று பவுன் எடை கொண்ட தங்கநகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் காயம் அடைந்த செல்வியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு செல்வியிடம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து சிவகிரி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வி மீது தாக்குதல் நடத்தி அவரது நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களையும் வலை வீசி தேடி வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பெண்ணை தாக்கி தங்கநகைகளை கொள்ளையடித்த சென்ற எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட துணை கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன் மேற்பார்வையில் சிவகிரி காவல் ஆய்வாளர்
கே.எஸ்.பாலமுருகன், உதவி ஆய்வாளர் வரதராஜன் மற்றும் காவலர்கள் விசாரணையை துரிதப்படுத்தி எதிரிகள் மாரி என்ற பூமாரி மற்றும் அவரது மகள் மதுமிதா இருவரையும் சங்கரன்கோவில் தனியார் விடுதியில் வைத்து கைது செய்து கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
அதன் பின் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் இருவரையும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு சில மணி நேரங்களில் எதிரிகளை கைது செய்த காவல்துறையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் வெகுவாக பாராட்டினார்.