July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

1 min read

44 MLAs support BJP to form government again in Manipur

29.5.2025
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. அங்கு வாழும் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் மனித சமூகத்தை உலுக்கியது.
250-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியும், ஆயிரக்கணக்கான வீடுகள், வழிபாட்டுத்தலங்களை தரைமட்டமாக்கியும், ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறச்செய்தும் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.

இந்த மோசமான கலவரம் தொடங்கி 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் மாநிலத்தில் முழுமையான அமைதி திரும்பவில்லை. பல இடங்களில் பதற்றமான சூழலே நீடித்து வருகிறது. இதற்கிடையே இந்த கலவரத்தை தடுக்க தவறியதாக முதல்-மந்திரி பைரேன் சிங் மன்னிப்பு கோரினார். பின்னர் தனது பதவியை கடந்த பிப்ரவரி மாதம் அவர் ராஜினாமா செய்தார்.

எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வந்து 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அங்கே மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்கும் முயற்சிகளை பா.ஜனதா தொடங்கி இருக்கிறது.

இதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ. தோக்சோம் ராதேஷியாம் சிங் தலைமையில் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து பேசினர். அப்போது மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கு 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தெரிவித்தனர்.

60 உறுப்பினர் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் தற்போது 59 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பா.ஜனதா கூட்டணியில் 32 மெய்தி எம்.எல்.ஏ.க்கள், 3 மணிப்பூரி முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், 9 நாகா எம்.எல்.ஏ.க்கள் என 44 பேர் உள்ளனர். இவர்களை தவிர 5 காங்கிரஸ் (மெய்தி) எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

மீதமுள்ள 10 எம்.எல்.ஏ.க்கள் குகி பிரிவினர் ஆவர். இதில் 7 பேர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் வென்றவர்கள். 2 பேர் குகி மக்களின் கூட்டணியை சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை ஆவர்.

மணிப்பூரில் வன்முறையும், பதற்றமும் இன்னும் முழுவதுமாக ஓயாத நிலையில், அங்கே புதிய அரசை அமைக்க மாநில பா.ஜனதா நடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ராதேஷியாம் சிங் கூறியதாவது:-
“மணிப்பூரில் மக்களின் விருப்பப்படி ஒரு அரசை அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர். இதை கவர்னரிடம் எடுத்துக்கூறினர். மேலும் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

நாங்கள் கூறியதை கவர்னரும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். மக்களின் நலன் கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர் எடுப்பார். எனினும் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோருவது குறித்து கட்சியின் மத்திய தலைமைதான் முடிவு செய்யும்.

அதேநேரம் நாங்கள் அரசு அமைக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பதும், அரசு அமைப்பதற்கான உரிமை கோருவதற்கு சமம்தான். ஆட்சியமைக்க உரிமை கோரும் 44 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் சத்யபிரதா தனித்தனியாகவும், கூட்டாகவும் சந்தித்தார். புதிய அரசு அமைப்பதை யாரும் எதிர்க்கவில்லை.

மணிப்பூர் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முதலில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள், தற்போது கலவரம் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகளை இழந்துள்ளனர்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.