குற்றாலம் பேரூராட்சி இடத்தில் வேலி போட முயற்சி- எதிர்ப்பு
1 min read
Attempt to erect a fence at Courtallam Town Panchayat land – opposition
29.5.2025
குற்றாலத்தில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வேலி போட முயன்ற போது குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே ஆதீனத்திற்கு சொந்தமான இடம் சில வருடங்களுக்கு முன்பாக குற்றாலம் பேரூராட்சிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவாவாடுதுறை ஆதீனம் சார்பில் அப்பகுதியில் உள்ள இடங்களை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் நில அளவீடு செய்ய முன் வந்தனர்.
இதில் திருவாடுதுறை ஆதீனம் சார்பில் 1989 ம் ஆண்டு குற்றால பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரு ஏக்கர் 12 சென்ட் நிலங்களும் சேர்த்து அளவீடு செய்து வேலி போடும் முயற்சியில் ஈடுபட்டதன் காரணமாக குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், பேரூராட்சி செயல் அலுவலர் சுஷமா, அருள்மிகு திருக்குறறறாலநாத சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆறுமுகம், பேரூராட்சி மன்ற துணை தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பராசக்தி நகர் செல்வதற்கு இந்த பாதையினை சுமார் 40 ஆண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் மேலும் இதே பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான கிணறு 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது, அது மட்டுமின்றி பொது சுகாதார வளாகம் சுமார் 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ளது. இப்பகுதிக்கு இடையூறு இல்லாமல் நில அளவை செய்ய ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தல் பெயரில் செயல்பட வேண்டும் எனவும், ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை மட்டும் அளவீடு செய்ய வேண்டும் எனவும் குற்றால பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு வாக்குவாதங்கள் பிறகு ஆதீனம் சார்பில் நில அளவீடு செய்யப்பட்டு அதற்கான குறியீடு கற்கள் நடப்பட்டது. அந்த வகையில் அப்பகுதியில் ஆதீனம் சார்பில் வேலி போட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வின் போது குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், பேரூராட்சி செயல் அலுவலர் சுஷமா, சுகாதார அலுவலர் ராஜ் கணபதி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் தங்கபாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஶ்ரீதர், நிர்வாகிகள் ஜெயகுமார், மணிகண்டன், குமாரசாமி, செல்வராஜ், சுரேஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.